இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கி மாயமாகி உள்ளார். அங்கு கிடைத்த மூளையின் திசு வெற்றி துரைசாமியுடையதா? என்பதை கண்டறிய அவரது குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அந்த பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசலப் பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.
அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இதில், வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. விபத்து நடந்த இடத்தை சுற்றி 3 கிலோமீட்டர் தூரத்தில் தேடியும் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இந்நிலையில், போலீசார், ராணுவ வீரர்கள், டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதை அவரின் குடும்பத்தார் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு மேல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாது என போலீஸாரிடம் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து நாளை காலையில் மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் நாளை மாலையில் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் இமாச்சல் பிரதேசத்தில் கிடைத்த மூளை திசுவின் டிஎன்ஏவும், வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும் ஒப்பீடு செய்யப்படும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.