புதுச்சேரி முதலியார்பேட்டையில் கடந்த வாரத்தில் ஒரு கொலை நடந்த நிலையில் நேற்று இரவு மேலும் ஒரு படுகொலை நடந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுவை கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடியை சேர்ந்தவர் ரமேஷ் (44). கூலித்தொழிலாளியான இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தும்பித்தலை ரமேஷ் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. இந்தநிலையில் முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (34) என்பவருக்கும் இவருக்கும் இடையே ஸ்டீபனின் அண்ணன் செந்திலிடம் ரமேஷ் தகராறு செய்த வகையில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரமேஷ் சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேற்று மாலை முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ அசோக்பாபுவின் அலுவலக வளாகத்தில் அமர்ந்து ரமேஷ் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்டீபனுக்கும் ரமேஷுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் உள்ளிட்டவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேஷை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். குடியிருப்புகள், கடைகள் மிகுந்த அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த முதலியார்பேட்டை போலீஸார் உயிருக்கு போராடிய ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி ஸ்டீபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.