புனே: மகாராஷ்டிராவில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், பள்ளியின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், அறங்காவலர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் காவல்நிலைய எல்லையில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவரை உடற்கல்வி ஆசிரியர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை உருவாக்கியது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிம்ப்ரி சின்ச்வாட்டின் நிக்டி காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பிரிவுகள் 74, 78, 79, 351(2), மற்றும் 115(2) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் பள்ளியின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், அறங்காவலர் உட்பட 7 பேரை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், "கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. அவர் முன்பு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
தண்டனை பெற்ற குற்றவாளியாக இருந்தபோதிலும், பள்ளி அதிகாரிகள் அவரை பணியில் மீண்டும் வைத்துக் கொண்டனர். எனவே அலட்சியம் மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததற்காக பள்ளியின் முதல்வர் மற்றும் அறங்காவலர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.