ஆந்திராவில் புர்கா அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். காலையில் உடற்பயிற்சிக் கூடம் சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சாலை சந்திப்பில் இஸ்லாமிய பெண்கள் போல புர்கா அணிந்த இருவர் காத்திருந்தனர். ஸ்ரீனிவாசலு வருவதைக் கண்டது அவரை உதவி கேட்பது போல குறுக்கிட்டனர். பெண்கள் எவரோ வழிகேட்டு நிற்கின்றனர் என ஸ்ரீனிவாசலுவும் பைக்கை நிறுத்தினார்.
திடீரென புர்காவுக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாள்கள் வெளிப்பட்ட பிறகே, எதிரில் வந்தது பெண்கள் அல்ல, தன்னை தாக்க வந்த மர்ம நபர்கள் என்பதை ஸ்ரீனிவாசலு உணர்ந்தார். அதற்குள் மர்ம நபர்கள் இருவரும் அரிவாள்களால் ஸ்ரீனிவாசலுவை வெட்ட ஆரம்பித்திருந்தனர்.
ஸ்ரீனிவாசலு பைக்கை போட்டுவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்தார். அப்போதும் மர்ம நபர்கள் அவரை விரட்டிச் சென்று வெட்டினார்கள். புர்கா அணிந்த இருவர், கொலை ஆயுதங்களுடன் துரத்துவதைக் கண்ட மக்கள் பீதியுடன் தெறித்து ஓடினார்கள். காவல்துறைக்கு தகவல் சென்று அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது குற்றுயிரும் குலையுயிருமாக ஸ்ரீனிவாசலு கிடந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீனிவாசலு பரிதாபமாக இறந்தார். கட்சிப் பிரமுகர் ஒருவரை மக்கள் நடமாட்டம் மிக்க சாலையில், புர்கா அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் கடப்பா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.