என் மனைவியின் குடலையும், கர்ப்பப்பையையும் சேர்த்து தைத்துவிட்டனர்: அரசு மருத்துவமனை முன்பு கணவர் போராட்டம்


மருத்துவமனை நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேசன்

அரசு மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக கூறி பண்ருட்டி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பத்மாவதி. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த 19.9.2022 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, ஆண் குழந்தை பிறந்துள்ளது.11 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை முடிந்தபிறகு டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 14.10.2022 அன்று அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மூன்று நாள் சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, கடலூர் அரசு மருத்துவமனையில் செய்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்த பின்னரே வயிற்றுவலி குணமானது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், மருத்துவ அலுவலர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இரண்டு கட்ட விசாரணை நடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வெங்கடேசன் அவருடைய மனைவி பத்மாவதி, மற்றும் உறவினர்களுடன் இன்று கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினர். அங்கிருந்த போலீஸார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வெங்கடேசன் கூறுகையில், "கடலூர் அரசு மருத்துவமனையில் எனது மனைவிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தபோது, குடலையும் கர்ப்பப்பையையும் சேர்த்து தைத்துவிட்டனர். இதனால் எனது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் விசாரணை நடந்தும் இதுவரை அந்த விசாரணை அறிக்கையை அவர்கள் எங்களுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ தெரிவிக்கவில்லை.

தற்போது எனது மனைவிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எனது மனைவியால் தற்போது உணவும் சரியாக உண்ண முடியவில்லை. எனவே எங்களுக்கு விசாரணை அறிக்கையை அளித்து நஷ்டஈடு வழங்க வேண்டும்" என்று கூறினார்.

மருத்துவமனை தரப்பில் பத்மாவதிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப் படுத்தி அவர்களை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து சென்றனர். இதனால் அங்கு ஒருமணி நேரத்திற்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

x