485 ரூபாய்க்காக, இரும்புத் தடியால் அடித்து இருவர் கொலை


கொலை

485 ரூபாயை திருடுவதற்காக, இரும்புத் தடியால் இருவரை அடித்துக்கொன்ற நபரை மைசூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள அரவை மில்லில் இருவர் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆராய்ந்து வந்தனர்.

அரவை மில்லின் இரவுக் காவலராக பணியாற்றும் 75 வயதாகும் வெங்கடேஷ் என்பவரும், அதே மில்லில் பணியாற்றும் 65 வயது சண்முகா என்பவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் போர்வையால் தலை மூடி உறங்கும் இருவரையும், மர்ம நபர் ஒருவர் இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்யும் காட்சி சிசிடிவில் பதிவாகி இருந்தது.

முகத்தை மறைத்திருந்ததால், மர்ம நபரை போலீஸாரால் அடையாளம் காண முடியவில்லை. எனவே மோப்ப நாய் உதவியுடன் துப்புத் துலக்க ஆரம்பித்தனர். அந்த முயற்சியில் பலனும் கிடைத்தது. அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞரை மோப்ப நாய் கவ்வியது. அபிஷேக் என்ற அந்த நபரை தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து முறைப்படி போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அந்த நபர், தான் நிகழ்த்திய இரட்டைக் கொலை தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அரவை மில்லை கடக்கும்போது, காவலாளி வெங்கடேஷை கவனித்து வந்த அபிஷேக், ஆதரவற்ற முதியவர் தனது சேமிப்புகளை மொத்தமாக வைத்திருப்பார் என நம்பி கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

வெங்கடேஷை கொல்லச் சென்ற அபிஷேக், அங்கே சண்முகாவும் இருந்ததால் அவரையும் கொல்ல நேர்ந்ததாக தெரிவித்திருக்கிறார். இரட்டைக் கொலை புரிந்த அபிஷேக், வெங்கடேஷ் வசம் ரூ485 மட்டுமே தேட்டையில் கிடைத்ததில் ஏமாந்திருக்கிறார். சொச்ச பணத்துக்காக இரட்டைக்கொலை புரிந்த நபரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

x