குமரியில் இருந்து கேரளத்திற்கு சொகுசு காரில் கடத்தப்படும் ரேஷன் அரிசி: அதிரடி காட்டும் போலீஸ்


ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தின், இருவேறு பகுதிகளில் இருந்து இன்று ஒரே நாளில் கேரளத்திற்கு சொகுசு கார்களில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்தியுள்ளார். இதேபோல் வருவாய்த்துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. இதனைத் தொடர்ந்து காரையும், ரேஷன் அரிசியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் களியக்காவிளை அருகில் உள்ள ஓட்டமரம் நெடுவிளை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(29) எனத் தெரியவந்தது. அவரைக் கைது செய்தனர்.

இதேபோல், கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரைக் கிராமத்தில் இருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸார் அங்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு சொகுசு காரும், டூவீலரும் நின்றது. அதன் அருகிலேயே மூவர் நின்று கொண்டு இருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீஸார் காரை சோதனை செய்தபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் கார், டூவீலர், ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர். ஒரே நாளில் இருவேறு இடங்களில் இருந்து இரண்டரை டன் ரேஷன் அரிசி பிடிக்கப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

x