சென்னை | பணத்தை பார்த்ததும் மாறிய மனம்: ரூ.10 லட்சம் பணத்துடன் தப்பிய நண்பர் கைது


சென்னை: சென்னை மேடவாக்கம் சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் பாசில் அகமது (48). மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் தேவைக்காக அவசரமாக ரூ.10 லட்சம் பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து தனது நண்பரான மதுரவாயலைச் சேர்ந்த அபிஷேக்கை தொடர்பு கொண்டு கடந்த 17-ம் தேதி பணம் கேட்டுள்ளார்.

அவரும், பணத்தை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து பாசில் அகமது தனது நண்பர் விஜய் என்பவருடன், அபிஷேக் கூறியபடி சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே காத்திருந்த அபிஷேக், ரூ.10 லட்சம் அடங்கிய பையை பாசில் அகமதுவிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக் கொண்ட அவர், விஜய்யிடம் கொடுத்து கீழே செல்லுங்கள், சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என அனுப்பி வைத்துள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு பார்த்தபோது விஜய் ரூ.10 லட்சம் பணத்துடன் மாயமானது தெரியவந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதிர்ச்சி அடைந்த பாசில் அகமது, போலீஸில் புகார் தெரிவித்தார்.

வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். தலைமறைவான விஜய்யை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.7.90 லட்சம் மீட்கப்பட்டது. கட்டுக் கட்டாக பணத்தை பார்த்த உடன் மனம் மாறி விஜய் பணத்துடன் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

x