தென்காசி மாவட்டத்தில் தன் மனைவி பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி அதில் ஆபாசமான புகைப்படங்கள், பதிவுகளைப் பகிர்ந்து வந்த வாலிபர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வாசுதேவனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் வாசுதேவன் தன் மனைவியைப் பழிவாங்க நினைத்தார். அதற்காக தன் மனைவி பெயரில், அவரது புகைப்படத்துடன் அவரே போலியாக ஒரு முகநூல் பக்கத்தைத் தொடங்கினார். அதில் தொடர்ந்து ஆபாசமான புகைப்படங்கள், ஆபாச கருத்துக்களையும் பகிர்ந்து வந்தார்.
இதேபோல் தன் மனைவியின் சகோதரி பெயரிலும் முகநூல் பக்கம் தொடங்கி அதிலும் இதேபோல் ஆபாச கருத்துக்களை பகிர்ந்து வந்தார். தொடர்ந்து தன் மாமனாருக்குப் போன் செய்து, உங்கள் இரு மகள்களும் பேஸ்புக்கில் ஆபாச கருத்துகள், புகைப்படங்களை பரப்புவதாகச் சொல்லி விடுவேன் எனவும் மிரட்டினார்.
இதுகுறித்து வாசுதேவனின் மாமனார், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வாசுதேவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், வாசுதேவன் மீது சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மனைவி பெயரில் ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி ஆபாச படங்களை கணவரே பதிவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.