தம்பியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த அண்ணன், மணமக்கள் மற்றும் உறவினர்கள் என 5 பேர்களை சுட்டுக்கொன்றதோடு, தற்கொலையும் செய்திருக்கிறார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. நொய்டாவில் வசிக்கும் ஷிவ்வீர் யாதவ் என்பவர், தனது தம்பி சோனு யாதவின் திருமணத்தில் பங்கேற்க, மனைவி டாலி யாதவுடன் சொந்த கிராமமான மைன்புரிக்கு சென்றிருக்கிறார். 3 நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்ற அவர், ஊர் திரும்புவதற்கு முந்தைய தினம் அந்த கோரத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
நாட்டுத்துப்பாக்கி மூலம், புதுமணத்தம்பதியான சோனு - சோனி ஆகியோரையும், இன்னொரு சகோதரரான பூலன் யாதவ், உறவினரான சௌரப் மற்றும் குடும்ப நண்பர் தீபக் என 5 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார். முதலில் மணமக்கள் தனித்திருந்த அறைக்குள் சென்று அவர்களை சுட்டுக்கொன்றவர், சத்தம் கேட்டு தன்னைத் தடுத்தவர்களையும் கொன்றிருக்கிறார். தடுத்த மனைவி டாலி மற்றும் உறவினர் சுஷ்மா யாதவ் ஆகியோர் துப்பாக்கி காயங்களோடு உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
5 பேர்களையும் சுட்டுக்கொன்றதன் நிறைவாக, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருக்கிறார் ஷிவ்வீர் யாதவ். மணவிழா கொண்டாட்டத்துக்காக திரண்ட வீட்டில் 6 பிணங்கள் விழுந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை மற்றும் தற்கொலையின் பின்னணியிலான காரணங்கள் இன்னமும் வெளிப்படவில்லை என்பதால், அந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.