போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகனைச் சிக்க வைக்காமல் இருக்க, ரூ.25 கோடி லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதாக என்சிபி முன்னாள் அதிகாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கார்டெலியா கப்பலில் பாேதைப்பொருள் கடத்தி வந்ததாக கடந்த 2021 அக்டோபர் 3-ம் தேதி, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
என்சிபி முன்னாள் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே குற்றம் சாட்டியபடி, ஆர்யன் கான் எந்தவொரு பெரிய போதைப்பொருள் கடத்தல் மோசடியிலும் ஈடுபடவில்லை என்று என்சிபி சிறப்பு விசாரணைக் குழு கடந்த ஆண்டு மே 27 அன்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஆர்யன்கான் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆர்யன்கான் கைதுக்கு முன்னதாக அவரை வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) முன்னாள் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சமீர் வான்கடே மீது சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையே கணக்கில் காட்டிய வருமான ஆதாரங்களை விட கூடுதலாக சொத்துக் குவித்த புகாரிலும் சமீர் வான்கடே சிக்கியுள்ளார்.
இந்நிலையில் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறையும் சமீர் வான்கடே மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சமீர் வான்கடேவுக்கு அமலாக்கத் துறை சார்பில் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய உள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சமீர் வான்கடே, தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கோரி, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து அறிந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சமீர் வான்கடே தவிர, என்சிபி முன்னாள் எஸ்.பி- விஸ்வ விஜய் சிங், உளவுத்துறை அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன், வெளி ஆட்களான கிரண் கோஸாவி, சான்வில் டிசோசா ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையிலேயே தற்போது அமலாக்கத் துறையும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.