வீட்டுக்கடனைச் செலுத்த முடியாததால் வங்கியில் இருந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தொழிலாளி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிந்து. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகள் ஆவர். ஸ்ரீகுமார், கடந்த 2016 ஆம் ஆண்டு களியக்காவிளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 6 லட்சத்து 35,400 ரூபாய் கடன் பெற்று வீடு கட்டியிருந்தார்.
அசலும், வட்டியுமாக இதற்கு முறையாகச் செலுத்திவந்த நிலையில் திடீரென ஸ்ரீகுமாரின் மனைவி சிந்துவுக்கு முதுகெலும்பில் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்தது. இதற்கு லட்சக்கணக்கில் செலவான நிலையில் ஸ்ரீகுமாரால் வீட்டுக்கடனுக்கான தவணையை உரிய முறையில் செலுத்தமுடியவில்லை. இதனிடையில் தன் குழந்தைகளின் கல்விச் செலவு செய்ய முடியாமல் தடுமாறியுள்ளார்.
இதற்கு மத்தியில் வீட்டுக்கடனுக்கான தொகையை உரியமுறையில் செலுத்தவில்லை என வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கித் தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் மனம் உடைந்த ஸ்ரீகுமார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்கடனைச் செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.