தடை செய்யப்பட்ட அருவியில் செல்ஃபி எடுத்த மாணவர் மாயம்: சடலமாக மீட்ட வனத்துறை!


அகஸ்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அருவியில் குளிக்கச் சென்று செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, மேலப்பாளையம் அசுரான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் பெரோஸ்கான்(19).இவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை பத்துக்கும் அதிகமான நண்பர்களுடன் அகஸ்தியர் அருவிக்கு பெரோஸ்கான், குளிக்கச் சென்றார். அங்கு ஒற்றை அருவி என்பது வனத்துறையால் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். ஆனால், அங்கு தன் நண்பர்களுடன் குளிக்கவும், செல்ஃபி எடுக்கவும் செய்த பெரோஸ்கான் திடீர் என மாயமானார். அங்கு வழக்கமான ரோந்துப் பணிக்கு வந்த வனத்துறையினரிடம் பெரோஸ்கான் மாயமாகி விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பின்பு ஒற்றை அருவி மேல் இருந்து கீழே விழும் ஆபத்தான பகுதியில் இருந்து பெரோஸ்கான் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் போலீஸார், பெரோஸ்கான் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடை செய்யப்பட்ட அருவி பகுதிக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x