விஜிலென்ஸ் ரெய்டுக்குப் பயந்து ரூ.2 கோடியை மாடியில் வீசிய துணை கலெக்டர்!


பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

ஒடிசாவில் மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, தன்னிடமிருந்த 2 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை பக்கத்து வீட்டு மாடியில் வீசிய கூடுதல் துணை கலெக்டர் கையும், களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் ராவத்

ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தின் கூடுதல் துணை கலெக்டராக பணியாற்றுபவர் பிரசாந்த் ராவத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. இதையடுத்து ராவத்திற்குச் சொந்தமான புவனேஸ்வர், நபரங்பூர் மற்றும் பிற இடங்களில் உள்ள வீடுகளில் மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர்.

அப்போது ராவத் தன்னிடமிருந்த 2 கோடி ரூபாய் ரெரக்கப்பணத்தை அட்டை பெட்டிகளில் கட்டி மனைவியின் உதவியுடன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் வீசிய போது கையும், களவுமாக பிடிபட்டார். 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களாக இருந்த 2 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில்," பிரசாந்த் ராவத் வீட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டுக்களாக 2 கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளோம். சமீபத்தில் தன்னிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 500 ரூபாய் நோட்டுக்களாக ராவத் மாற்றியுள்ளது தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சுந்தர்கர் மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டு அதிகாரியாக பிரசாந்த் ராவத் இருந்தபோது, பஞ்சாயத்து செயல் அதிகாரி ஒருவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக விஜிலென்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒடிசாவில் அரசு அதிகாரி ஒருவரிடம் இருந்து அதிக பணம் கைப்பற்றப்பட்டது இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பாக ஏப்ரல் 2022-ம் ஆண்டு, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனப் பிரிவில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்த கார்த்திகேஸ்வர் ரவுலின் அலுவலக வளாகத்தில் நடந்த ரெய்டில் ரூ.3.41 கோடி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x