கேரளத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது அவர்களுக்கு லியோன் நகர் பகுதியில் ஒரு மறைவான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது 100 பிளாஸ்டிக் மூட்டைகளில் 2 டன் அளவிற்கு ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் உடையார்விளை பகுதியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x