நெல்லை மாவட்டம், நெடுங்குளம் ரயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடியதுடன் தீவைக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி-நாங்குநேரி ரயில்வே வழித்தடத்தில் நெடுங்குளம் பகுதியில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இங்கு கேட் கீப்பர் விஷ்ணு என்பவர் பணியில் இருக்கும்போது, நேற்று அதிகாலை 2 மணி அளவில் பைக்கில் வந்த இருவர் அங்கு இருந்த தொலைபேசி உள்ளிட்ட பொருள்களை அடித்து சூறையாடினர். தொடர்ந்து அந்த ரயில்வே கேட் கீப்பர் அறைக்கும் தீவைக்க முயன்றனர். இதற்காக ஒரு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்து இருந்தனர்.
இந்தநிலையில் கேட் கீப்பர் விஷ்ணு சத்தம் போடவே தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் குற்றவாளி யார் என போலீஸாரே குழம்பிவந்த நிலையில் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு திடீர் என ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், கேட் கீப்பர் அறைக்கு தீவைக்க முயன்றவரைக் கைது செய்து விட்டீர்களா? இல்லையா? நான் தான் ரயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிவிட்டு தீவைக்க முயன்றேன் என பட, படவென பேசிவிட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பிச்சைகண்ணு என்பவர் தான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போன் போட்டது என்பதும், அவர்தான் ரயில்வே கேட் கீப்பர் அறையைக் கொளுத்த முயன்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸார் தேடிய போது தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, “கடந்த 19-ம் தேதி நெடுங்குளம் ரயில்வே கேட் வழியாகச் சென்றேன். அப்போது இந்த கேட் மூடி இருந்தது. ரயில் வருவதற்குள் கேட்டைத் திறந்து என்னை அனுப்பச் சொன்னேன். ஆனால் கேட் கீப்பர் மூடிய கேட்டைத் திறக்கமுடியாது எனச் சொன்னதால் இன்னொருநாள் வந்து கேட் கீப்பர் அறையை சூறையாடிவிட்டு, தீவைக்கவும் முயன்றேன்” என கூலாகச் சொன்னார். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.