திருப்பூர்: திருப்பூரில் பாலியல் தொழில் செய்த பெண்ணின் கணவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட 3 காவலர்கள் இன்று (ஆக. 23) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகர் கோவில்வழியை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அந்த இளைஞரை, கும்பல் வெளியே அழைத்து சென்றுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் இளைஞர் வீடு திரும்பாமல் இருக்கவே, இளைஞரின் மனைவி நல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கடத்தப்பட்ட இளைஞரின் மனைவி பாலியல்தொழிலில் ஈடுபட்டதை அறிந்து இளைஞரை கடத்தி பணம் பறிக்க அக்கும்பல் முயன்றதாக மாநகர போலீஸார் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், கடத்தப்பட்ட இளைஞர் அக்கும்பலிடம் இருந்து தப்பி நிலையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றும் காவலர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33) மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர் லட்சுமணன் (32) மற்றும் இவர்களின் நண்பர்களான ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகிய 6 பேரை பெருமாநல்லூரில் வைத்து நல்லூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட காவலர்கள் சோமசுந்தரம், கோபால்ராஜ் மற்றும் லட்சுமணன் ஆகியோரை திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இன்று (ஆக. 23) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.