சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து லாரி மீது மோதி 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வந்த லாரி இதைக் கவனிக்காமல் வேகமாக வந்தது. அருகே வந்ததும் நின்று கொண்டிருந்த லாரியை கவனித்த இரும்பு லாரியின் ஓட்டுநர் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை வேகமாக திருப்பியுள்ளார்.
அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது அந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக உருக்குலைந்தது. அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் மாவட்ட அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.