கேரளாவில் படகு கவிழ்ந்து இருவர் பலி: துக்க வீட்டிற்கு சென்ற போது நிகழ்ந்த துயரம்


நீரில் மூழ்கி இருவர் பலி

கேரளாவில் துக்க வீட்டுக்குப் படகில் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், வைக்கம் கொடியாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்(33). இவர் தனது உறவினர் மரணம் அடைந்த செய்தி தெரிந்து தனது தாய் அம்பி, தந்தை சசி, சகோதரி சாரி, அவரது குழந்தைகள் இதிகா, இவான் ஆகியோர் உடன் சென்றார். இவரது உறவினர் வீடானது கரியாறு என்னும் ஆற்றின் மறுகரையில் உள்ளது. சரத் தன் குடும்பத்தோடு இந்த ஆற்றின் மேல் படகில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பாரம் தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் ஆறுபேரும் ஆற்றில் மூழ்கினர். உடனே அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சரத், குழந்தை இவான்ஸ் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்கள் ஆறுபேரும் புல் வெட்டச் செல்லும் சிறிய ரக படகில் சென்றதால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இத்தனைக்கும் சரத்திற்கு நன்கு நீச்சல் தெரியும். குழந்தைகள் இவான்ஸ், இதிகா இருவரும் நீரில் மூழ்கியதைப் பார்த்ததும் அவர்தான் முதலில் இதிகாவை மீட்டு அருகில் உள்ள இன்னொரு படகில் சேர்த்தார். தொடர்ந்து குழந்தை இவானை மீட்க முயன்றபோது ஆற்றில் நீரில் மூழ்கி சரத் உயிர் இழந்ததும் தெரியவந்தது.

துக்க வீட்டுக்குப் படகில் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் கேரளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x