மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு: திண்டுக்கல்லில் பரபரப்பு


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் உள்ள ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரூபா கீதா ராணி தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் ஏற்கெனவே ஆணையராக பணியாற்றிய இடங்களில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டதாகவும், கொரோனா காலத்தின் போது கிருமி நாசினி மருந்து வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருவது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x