சாத்தான்குளம்: வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!


உயிரிழப்பு

சாத்தான்குளத்தில் வயிற்று வலி மருந்து என நினைத்து ஹோ்டையை குடித்த பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆா்.சி.வடக்குத் தெருவைச் சோ்ந்தவர் பேச்சிமுத்து. மீன் வியாபாரியான இவருக்கு, இருமகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இதில், மகள் பூஜாபேபி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

அவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக, அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 30-ம் தேதி பூஜாபேபிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது வீட்டில் இருந்த பெற்றோரும் மீன் வியாபாரத்திற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில், பூஜாபேபி, வயிற்று வலி மருந்துக்குப் பதிலாக, ஹோ் டையை குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனை

வீட்டிற்கு வந்த பெற்றோர் மயங்கிய நிலையில் இருந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில் மாணவி பூஜாபேபி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x