மனிதர்களின் மனப்பிறழ்வுகள் எளிதில் வெளியே புலப்படாதவை. ஒருவரது உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த கோரம் அம்பலப்படும்போது, சுற்றியிருப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். அப்படியொரு விநோதமும், விபரீதமும் கலந்த சம்பவம் பிரான்ஸ் தேசத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஊடகங்கள் வரிந்துகொண்டு விவரிக்கும் அவை, இப்படியும் உலகத்தில் நடக்குமா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
பிரான்ஸ் தேசத்தின் மசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. டொமினிக் என்ற நபர் அண்மையில் காவல்துறை பிடியில் சிக்கினார். மால்களில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்து படம்பிடித்ததாக டொமினிக் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், கேமராவை கைப்பற்றியதோடு இன்னொரு காரியமும் செய்தனர்.
இதே போன்ற முறைகேட்டை தொடர்ந்து செய்பவர்கள், அவற்றின் ஒளிப்பதிவுகளை எங்கேனும் ஒளித்து வைத்திருப்பார்கள் என்பதால், டொமினிக்கை கைது செய்த வேகத்தில் அவரது வீட்டை சோதனையிட்டனர். இதற்கு டொமினிக்கின் மனைவி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். தனது கணவர் மீது அபாண்டமாக காவல்துறை குற்றம்சாட்டுவதாக புலம்பினார். ஆனால், டொமினிக் வீட்டில் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான யுஎஸ்பி டிரைவ் பதிவுகளை கைப்பற்றி அவற்றை ஆராய்ந்தபோது, டொமினிக்கின் மனைவி மயங்கி விழுந்தார். அத்தனை வீடியோக்களிலும் டொமினிக்கின் மனைவியை அறிமுகமற்ற ஆண்கள் சீரழிக்கும் காட்சிகள் நிறைந்திருந்தன.
காவல்துறையினரும் அதிர்ந்து போனார்கள். டொமினிக்கை தீர விசாரித்ததில் பகீர் உண்மைகள் வெளிப்பட்டன. டொமினிக் அடிப்படையில் பாலியல் சார்ந்த மனப்பிறழ்வு கண்டவர். அருகில் இருப்பவருக்கு அது எளிதில் தெரியாது. அப்படித்தான் டொமினிக்கின் மனைவியே கணவனின் சுயரூபத்தை அறிந்திருக்கவில்லை. விபரீத பாலியல் நாட்டம் கொண்ட டொமினிக், அதே போன்றவர்களுக்காக செயல்படும் வலைதளக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
அதன் மூலமாக, அந்நிய ஆண்களை அடிக்கடி வரவழைக்கும் டொமினிக், மனைவியை அவர்கள் பலாத்காரம் செய்யும் காட்சிகளை ரகசிய கேமராவில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக மனைவியின் உணவில் அவர் அறியாது, தூக்கமூட்டும் லோராஸெபம் மருந்துகளை கலந்திருக்கிறார். மனைவி மயங்கியதும், பாலியல் வலைதளத்தில் விழைவு தெரிவித்த அந்நியர்களை, அக்கம்பக்கத்தினர் அறியாது வரவழைத்து பின்னர் வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இப்படியே சுமார் 10 வருடங்களாக தொடர்ந்த கணவனின் கொடூரங்களுக்கு அப்பாவி மனைவி ஆளாகி இருக்கிறார். வீடியோ பதிவுகளின் அடிப்படையில் அந்நிய ஆண்களில் அடையாளம் கண்டறியப்பட்ட, 25 முதல் 73 வயதுக்குட்பட்ட 51 நபர்களை முதல்கட்டமாக போலீஸார் கைது செய்துள்ளனர். டொமினிக் சிறையிலும், அவரது மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலும் இருக்கிறார்கள். டெலகிராப் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் இந்த செய்தி, பாலியல் மனப்பிறழ்வுக்கு ஆளான நபர்கள் குறித்த எச்சரிக்கையை உலகளவில் பரப்பியிருக்கிறது.