நடிகர், நடிகைகள் தேவை; போலி விளம்பரத்தால் பதறிய கலைப்புலி தானு: போலீஸில் அதிரடி புகார்


புதுப்படத்தில் நடிகர், நடிகை தேவை என விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தானு வி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தெறி, அசுரன், கபாலி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. தி.நகர் பிரகாசம் தெருவில் இந்நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வி கிரியேஷன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜெகதீசன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர், நடிகைகள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் பொதுமக்களிடமிருந்து அந்த கும்பல் பணம் பறித்து மோசடியில் ஈடுபடுகிறது.

இதில் பணத்தை இழந்த பொதுமக்கள் தங்களது நிறுவனத்தை நாடி புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக ஒரு கும்பல் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறது. உடனே அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x