புதுச்சேரி முதலியார்பேட்டை முல்லைநகரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜி (28), என்பவர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை, அனிதாநகர் சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ் (34). பூமியான்பேட்டையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ராஜி சென்றிருந்தார். இறந்துபோனவர் உடலை தேங்காய் திட்டு பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு சிலரும், சொந்த ஊரான தென்னஞ்சாலை பகுதியில்தான் அடக்கம் வேண்டும் என்று மற்றொரு சாராரும் அங்கு சண்டையிட்டுள்ளனர்.
அதில் தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ராஜியும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். அவருடன் சிலர் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஒருவழியாக உறவினர் உடல் அடக்கம் முடிந்து வீடு திரும்பிய ராஜி, நேற்று இரவு தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு பேர் தங்கள் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை அவர் மீது வீசியுள்ளனர். இதில் தலை உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் அடைந்த ராஜி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார் ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.