தருமபுரி: விவசாய கிணற்றில் மிதந்த 2 குழந்தைகள், தாயின் சடலங்கள் மீட்பு


குக்கல் மலைக் கிராம விவசாய கிணற்றில் இருந்த சடலங்களை மீட்கும் பணி நடைபெற்றது

அரூர்: பொம்மிடி அருகே விவசாய கிணற்றில் தாய் மற்றும் 2 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள குக்கல் மலை காமராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் தமிழரசன் (32) லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஸ்ரீதேவி (24). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா (6) ஹாசினி (4)என இரண்டு பெண் குழந்தைகள். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இவர்களது வீட்டின் அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத விவசாய கிணற்றில் ஸ்ரீதேவியும் அவரது இரண்டு மகள்களும் பிணமாக மிதந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இதைப் பார்த்துவிட்டு பொம்மிடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 7 ஆண்டுகளே ஆன நிலையில் தனது குழந்தைகளுடன் தாய் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது கொலையா தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x