சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் காவல்துறையினர் அலர்ட்டானார்கள்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று மதியம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் வியாசர்பாடி மல்லிகை பூ காலனியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மணிகண்டன் இன்று மதியம் தந்தையின் செல்போனை எடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் மணிகண்டன் தந்தையிடம் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். ஏற்கெனவே மணிகண்டன் இதேபோல் பலமுறை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.