ஒட்டன்சத்திரம் அருகே முதியவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்,அவருடன் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்த முதியவர் மாணிக்கம். கிணறு தோண்டும் கூலி வேலை செய்யும் இவரும், வலையப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவரும் பொருளூர் கிராமத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பிய இருவரும் பொருளூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கீழ் உறங்கியுள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணிக்கம் எழுந்திருக்கவில்லை. இதனால் அப்பகுதி வழியே சென்றவர்கள், அருகில் சென்று பார்த்த போது முதியவர் மாணிக்கம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இக்கொலை தொடர்பாக, மாணிக்கத்துடன் சேர்ந்து வாழ்ந்த பாப்பாத்தியை போலீஸார் கைது செய்து எதற்காக கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.