அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!


அபிஷேக் கோசல்கர் மீது துப்பாக்கி சூடு.

மும்பையில் சிவசேனா (யுபிடி) முன்னாள் கவுன்சிலர் அபிஷேக் கோசல்கரை, மவுரிஸ் நோரோனா என்பவர் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சிவசேனா (யுபிடி) தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர். இவர் நேற்று மாலை பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மவுரிஸ் நோரோனா என்பவர் அபிஷேக் கோசல்கரை திடீரென துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில் அபிஷேக் கோசல்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக போரிவாலியில் உள்ள கருணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கிடையே, கோஷால்கர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மோரிஸ், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அபிஷேக் கோசல்கருக்கும், மவுரிஸ் நோரோனாவுக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் இருவரும் சமரசம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மவுரிஸ் நோரோனா, அபிஷேக் கோசல்கர்

இந்நிலையில் மௌரிஸ் நோரோனாவை சம்பவத்தன்று பேஸ்புக் நேரலை நிகழ்ச்சிக்கு அபிஷேக் கோசல்கர் அழைத்ததாகவும், அப்போதுதான் இந்த விபரீத சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் முழுவதும் பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பானது.

இந்த சம்பவம் குறித்து சிவசேனா (யுபிடி) எம்பி- சஞ்சய் ராவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா' வில் நோரோனா அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜினாமா செய்ய வேண்டும்" என குற்றம்சாட்டியுள்ளார்.

சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் உல்ஹாஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்தவாரம், ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை ஓய்வதற்குள் அம்மாநிலத்தில் அரசியல் ரீதியான மற்றொரு துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x