கும்பகோணம்: கழிவுநீர் சுத்திகரிப்பு கிணற்றில் விழுந்து தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு


கும்பகோணம்: கும்பகோணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு கிணற்றில் விழுந்து தூய்மைப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்பகோணம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (49). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர், தனியார் துப்புரவு நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் வழக்கமாக பாணாதுறையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் கிணற்றைச் சுற்றி உள்ள சிமென்ட் பலகையில் அமர்ந்திருப்பது வழக்கம்.

இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் நிலையில், வழக்கம் போல், இன்றும் கழிவுநீர் கிணற்றைச் சுற்றி உள்ள சிமென்ட் பலகையில் அமர்ந்திருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதில் கழிவுநீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த அருகில் உள்ளவர்கள், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ராஜேந்திரனின் உடலை கழிவு நீர் கிணற்றில் இருந்து மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x