தந்தை செல்போனை பறித்ததால் ஆத்திரத்தில் மொட்டை மாடியில் இருந்து குதித்து அவரது மகள் தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கலைஞர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவரது மகள்,பள்ளி படிப்பு முடித்த நிலையில் இந்த ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனின் மகள் தொடர்ந்து செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை ரவிச்சந்திரன் கண்டித்தும் அவரது மகள் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்தின், மகள் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அதைப்பறித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அவரது மகள், தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மாடியில் இருந்து குதிக்க முயன்ற மாணவியை சமாதானப்படுத்தும் வகையில் பேசியபடி, மாடியில் இருந்து அவரை மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.