மோசடி நிறுவனங்களில் முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸுக்கு டிஜிபி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பல நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனி, எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ், ஹிஜாவு அசோசியேட்ஸ், எல்பின், திரிபுரா சிட்ஸ் மற்றும் யூனிவர்ஸ் டிரேடிங் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் தற்போதைய நிலை குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகள், மற்றும் பணம் இழந்தவர்களுக்கு பணம் விரைவாக திரும்பக் கிடைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மோசடி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் பலரும் வெளிநாடுகளில் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர ரெட் கார்னர் நோட்டீஸ் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.