கடல் வழியாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புகுந்து திருட்டு; 10 பேர் சிக்கினர்: 5 ஊழியர்கள் சஸ்பெண்ட்


தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக கடல் வழியே படகுமூலம் வந்து காப்பர் உள்ளிட்ட உலோகங்களைத் திருடிய 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் பணியில் அசட்டையாக இருந்த 5 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இ, கே ஆகிய பிரிவுகளில் அனல்மின் நிலையத்திற்குத் தேவையான பொருள்கள் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து காப்பர் குழாய், டியூப் உள்ளிட்டவை திருடுபோய் வந்தது. இதுகுறித்து அனல்மின் நிலைய பண்டக சாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி, தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கடந்த 8 நாள்களில் மட்டும் இங்கு இருந்து 690 கிலோ காப்பர் குழாய்கள், 834 காப்பர் டியூப்புகள் திருடு போய் இருந்தன. இதுகுறித்து குற்றவாளிகளைப் பிடிக்க தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களது விசாரணையில் குற்றவாளிகள் படகில் வந்து, கடல் மார்க்கமாக திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபிரேம்சிங், மதன், மாசாணமுத்து, பிரகாஷ், சுப்பிரமணி, குழந்தை பாண்டி, கணேச மூர்த்தி, அழகர், சந்தனராஜ், மாரிமுத்து ஆகிய பத்துபேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதேபோல் பாதுகாப்பு விசயத்தில் மெத்தனமாக இருந்த அனல்மின் நிலைய ஊழியர்கள் 5 பேர் இவ்விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

x