கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில் உள்ள நிங்காரவிளை பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரத் தொழில் நடப்பதாக திருவட்டாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் இரு பெண்கள் அரைகுறை உடைகளுடன் வலம் வந்தனர். அந்த வீட்டில் ஒரு ஆணும் இருந்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் குமரி மாவட்டம், அப்பட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன்(62) என்பதும், ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், ரவீந்திரன் தன் சொந்தத் தேவைக்கு என அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இதற்காகவே சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து இரு அழகிகளையும் அழைத்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது. செல்போன் மூலம் வாலிபர்களுக்கு வலைவீசி அந்த வீட்டில் விபச்சாரத் தொழில் செய்து வந்து உள்ளார் ரவீந்திரன்.
இதில் மீட்கப்பட்ட இருபெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். திருவட்டாறு போலீஸார் ரவீந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.