கோயில் திருவிழாவில் தகராறு: இரு தரப்பு மோதலில் தொழிலாளி கொலை @ திருப்பத்தூர்


உயிரிழந்த சந்துரு.

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு அருகேஉள்ள வி.எஸ்.கே. பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடைபெற்றது.

இத்திருவிழாவில் பூங்கரகம் கொண்டு வரும்போது கோணாமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், காமராஜர் நகரைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழி லாளி சந்துரு (19) என்பவரை சிலர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். உடனே, அங்கு வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சந்துரு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சந்துருவை கத்தியால் குத்திக்கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சந்துருவின் உறவினர்கள், நண்பர்கள் கோணாமேடு பகுதிக்குள் நுழைந்து அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், வீட்டின் ஜன்னல் கதவுகள் என கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதற்கிடையே, வாணியம்பாடி அரசு மருத்துவமனை முன்பாக சந்துரு உறவினர்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், கோணாமேடு பகுதியில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி கோணாமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., ஷ்ரேயாகுப்தா பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், சந்துரு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஜான் என்பவரை தனிப்படை காவல் துறையினர் சேலத்தில் நேற்று அதிகாலை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தர், கார்த்திக் ஆகிய 2 பேர் என மொத்தம் 3 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

x