காட்டுப் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு:கூடங்குளம் அருகே பரபரப்பு


வெடிக்காத நாட்டு வெடிகுண்டு பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இடிந்தகரை உள்ளிட்ட ஏராளமான மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக சர்ச்சை எழுவதுண்டு. இந்த சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இதுதொடர்பாக போலீஸார் ஆய்வும் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் கூடங்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று கிடப்பதாக அப்பகுதிவாசிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அது நாட்டு வெடிகுண்டுதான் என்பதை உறுதிசெய்த போலீஸார், அப்பகுதியில் திரண்டு இருந்த மக்களை உடனே வெளியேறச் சொன்னார்கள். தொடர்ந்து இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர்கள், நாட்டு வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று காலை முதலே அந்தப் பகுதி முழுவதும் மோப்பநாய் கொண்டு வேறு எங்கேனும் நாட்டு வெடிகுண்டு கிடக்கிறதா எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யாரோ இதை வீட்டில் செய்து பார்த்துவிட்டு, தூக்கி வீசி வெடிக்கிறதா என சோதித்துப் பார்த்திருக்கலாம். அது மீண்டும் கையில் எடுத்தால் வெடித்துவிடுமோ என்னும் அச்சத்தில் அப்படியே விட்டு சென்று இருக்கலாம் என்னும் கோணத்தில் கூடங்குளம் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x