சென்னையில் கஞ்சா மற்றும் மதுபோதையில் கல்லூரி வந்த 12 மாணவர்கள் தற்காலிக நீக்கம்செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் விடுமுறை முடிந்து கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாநில கல்லூரி, பச்சையப்பன், நந்தனம் மற்றும் புதுக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் 'ரூட் தல ' போன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கல்லூரிக்கு வரும் மாணவர்களை கண்காணித்து கல்லூரிக்குள் அனுப்பும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
இதே போல் ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் உதவி பேராசிரியர் ஹைதர்அலி மற்றும் காவல்துறை இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓரு மாணவர் மதுபோதையிலும், மூன்று மாணவர்கள் கஞ்சா போதையிலும் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று மாணவர்கள் பி.ஏ இரண்டாமாண்டு படிப்பதும், மதுபோதையில் இருந்த மாணவர் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா, மதுபோதையில் கல்லூரிக்கு வந்த நான்கு மாணவர்கள், இவர்களுடன் வந்த எட்டு மாணவர்கள் உட்பட 12 பேரை கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் கஞ்சா மற்றும் மதுபோதையில் கல்லூரிக்கு வந்த விவகாரம் சக மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.