பீகாரில் 50 ரூபாய் திருடியதாக சந்தேகத்தின் பேரில் சுங்கச்சாவடி ஊழியரை சக ஊழியர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சுங்கச்சாவடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர் பல்வந்த் சிங் என்பவரை 50ரூபாய் திருடியதாக சந்தேகத்தின் பேரில் சக ஊழியர்கள் நேற்று முன்தினம் தாக்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங், இந்த தாக்குதலில் படுகாயமடைந்தார்.
அத்துடன் அவரை தாக்கிய கும்பல், அவரது சொந்த ஊருக்கு ரயிலில் ஏற்றி அனுப்பியுள்ளது. ஆனால், நடக்க முடியாத நிலையில் இருந்த பல்வந்த் சிங் கோண்டா ரயில் நிலையம் வந்த போது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பல்வந்த் சிங் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போஜ்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் இறுதிச் சடங்கு செய்ய பல்வந்த் சிங் உடலைக் கொண்டு சென்றனர். ஆனால், பல்வந்த் சிங் உடலை அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பல்வந்த் சிங் தாக்குதலுக்குள்ளான வீடியோ நேற்று வைரலானது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதன் பேரில் அபிமன்யு ஷர்மா, சுனில் ஜாகர், சுமித், விக்ரம் கௌஷிக், ஹரியாணாவின் ரோஹ்தக் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேந்திர சிங் மற்றும் சாகர் கோலி ஆகியோர் தான்பல்வந்த் சிங்கை தாக்கிய குற்றவாளிகள் என அடையாளம் கண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவராஜ் பிரஜாபதி இன்று கூறுகையில்," பல்வந்த் சிங், அர்ராவில் உள்ள குல்ஹாடியாவில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். அவருடைய மற்ற சகாக்கள் ஏதோ ஒரு விஷயத்துக்காக அவருடன் சண்டை போட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போஜ்பூர் காவல் கண்காணிப்பாளரிடமும் தெரிவித்துள்ளோம்.
திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில், சுங்கச்சாவடி ஊழியர்கள் தன்னைத் தாக்கியதாகவும், அதன் பிறகு தான் ரயிலில் உட்கார வைத்ததாகவும் பல்வந்த்சிங் எங்களிடம் கூறினார். அவரை ரயிலில் ஏற்றியபோது உடல்நிலை சரியில்லை. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" என்றார்.
திருட்டுக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி ஊழியரை சக ஊழியர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.