தகுதியில்லாதவர்களுக்கு ரூ.1.55 கோடி வீட்டுக்கடன்: வங்கி மேனேஜருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை


மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சிறை

தகுதியில்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 15 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட தேசியமயமாக்கப்பட்ட தலைமை வங்கி மேலாளராக பணியாற்றியவர் குணசீலன். இவரது பணிக்காலத்தின் போது வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு வீட்டுக்கடன் வழங்கியுள்ளார். இந்நிலையில் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, வீட்டுக்கடன் பெற்றவர்களில் பலர் அதற்குரிய தகுதி உடையவர்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அத்துடன் சுமார் 1.55 கோடி ரூபாய் அவர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வங்கி மேலாளர் குணசீலன், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் கடன் பெற்றவர்கள் என 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் மோசடி குற்றச்சாட்டு அனைத்தும் நிருபிக்கப்பட்ட நிலையில் வங்கி மேலாளர் குணசீலனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், உடந்தையாக இருந்த ஜான்சன், குமரேசன் மற்றும் ஜேசுவின் பெபி, மகாலிங்கம், ஆறுமுகம் உள்ளிட்ட 14 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.

x