கூலிப்படையை ஏவி ஆர்டிஐ ஆர்வலர் படுகொலை: உடலை குவாரியில் வீசிய 3 பேர் கைது


ஆர்டிஐ ஆர்வலர் கொலை

ஹைதராபாத்தில் கூலிப்படையால் ஆர்டிஐ ஆர்வலர் கொலை செய்யப்பட்டு குவாரி நீரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஜங்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்ல ராமகிருஷ்ணய்யா(70).ஓய்வு பெற்ற மண்டல் பரிஷத் வளர்ச்சி அதிகாரியான நல்ல ராமகிருஷ்ணய்யா, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக திகழ்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் காணாமல் போனதாக நல்ல ராமகிருஷ்ணய்யாவின் மகன் போலீஸில் புகார் செய்தார்.

இந்த நிலையில், தண்ணீர் நிரம்பிய குவாரியில் நல்ல ராமகிருஷ்ணய்யா உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு போலீஸார் நடத்தினர். அப்போது நல்ல ராமகிருஷ்ணய்யா கொலை செய்யப்பட்டு அவரது உடல் குவாரியில் வீசப்பட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது, நல்ல ராமகிருஷ்ணய்யாவிற்கும், அதே ஊரைச் சேர்ந்த அஞ்சய்யாவிற்கும் நிலத்தகராறு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அஞ்சய்யாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

போச்சன்னப்பேட்டை கிராமத்தில் அரசு ஒதுக்கீட்டு நிலத்தின் பட்டாக்களை ரத்து செய்ததற்கு எதிராக அஞ்சாய்யாவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தை நல்ல ராமகிருஷ்ணய்யா நாடியுள்ளார்.இதுதொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின்படி மனுக்களை அனுப்பியதும் தெரிய வந்தது.

இதனால், கூலிப்படையை ஏவி அவரை அஞ்சய்யா கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக கூலிப்படைக்கு 8 லட்ச ரூபாய் பேசப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதி என்பவர் முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இதையடுத்து கூலிப்படையால் ஜூன் 15-ம் தேதி போச்சன்னப்பேட்டையில் ராமகிருஷ்ணய்யா கடத்தப்பட்டுள்ளார்.

அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்று அந்த கும்பல் குவாரியில் வீசியது தெரிய வந்தது. மூன்று நாட்கள் கழித்தே அவரது பிணம் குவாரியில் கிடந்த விஷயம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அஞ்சய்யா, கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். மற்ற குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x