சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் நகைத்திருட்டு: தேவசம்போர்டு ஊழியர் கைது!


சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் காணிக்கையாக வந்த 11 கிராம் எடை கொண்ட தங்க வளையலைத் திருடிய கேரள தேவசம்போர்டு ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலையில் ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின் முதல் 5 நாள்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது நடக்கும் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பிறகோயில்களில் பணிசெய்யும் தேவசம்போர்டு ஊழியர்களும் இங்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

அந்தவகையில் ஏற்றமானூர் வாசுதேவபுரம் ஆலயத்தில் ஊழியராக இருக்கும் ரெஜிகுமார் என்பவரும் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி, சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் 11 கிராம் எடை கொண்ட தங்கவளையல் ஒன்றை கோயில் உண்டியலில் போட்டார். அது கன்வேயர் பெல்ட் பகுதியில் கிடந்தது. இதை மற்ற ஊழியர்கள் கவனிக்கவில்லை. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஊழியர் ரெஜிகுமார், அதைத் திருடி எடுத்து, மறைத்துவைத்துவிட்டார். அந்த காட்சி தேவசம்போர்டு விஜிலென்ஸ் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து ரெஜிகுமாரிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்தபோது, அதை அவர் மறுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த அறையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தலையணைக்கு அடியில் 11 கிராம் தங்க வளையலை அவர் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பம்பை போலீஸார் ரெஜிகுமாரைக் கைதுசெய்தனர். இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x