திருப்பூரில் இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி: 3 போலீஸார் உட்பட 6 பேர் கைது


திருப்பூர்: திருப்பூரில் இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாக 3 போலீஸார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில்இருந்தபோது, போலீஸ் சீருடை அணிந்தவர்கள் உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து, அவரை வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் வீடு திரும்பாததால், அந்த இளைஞரின் மனைவி நல்லூர் போலீஸில் புகார் அளித்தார்.

இதற்கிடையே, அந்த இளைஞர் நேற்று முன்தினம் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசியபோது, தன்னை சிலர் கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாகவும், ரூ.2 லட்சம் பணம் கேட்டு தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையறிந்த நல்லூர் போலீஸார், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தி, பெருமாநல்லூரில் ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞரை நேற்று மீட்டனர்.

விசாரணையில், அவரை கடத்திச் சென்றவர்கள் திருப்பூர் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றும் போலீஸார் சோமசுந்தரம்(31), கோபால்ராஜ்(33), நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் லட்சுமணன்(32) மற்றும் அவர்களது நண்பர்கள் ஜெயராம்(20), ஹரீஷ்(25), அருண்குமார்(24) என்பது தெரிந்தது. இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட 6 பேரும், இணையவழியில் பாலியல் தொழில் செய்வோரைக் கண்காணித்து, அவர்களைப் பிடித்து பணம் பறிக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி இணையவழியில் பாலியல் தொழில் நடத்திய இளைஞரைக் கடத்திச் சென்று, பணம் பறிக்க முயன்றுள்ளனர். சைபர்க்ரைம் போலீஸார் உதவியுடன் அந்த இடத்தைக் கண்டறிந்து இளைஞரை மீட்டதுடன், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்துள்ளோம்’’ என்றனர்.

x