பெற்ற தாயை கொல்ல மாஸ்டர் பிளான்; செல்போனுக்கு அடிமையானதில் தடம்புரண்ட 13 வயது சிறுமி


செல்போன் போதை

குழந்தைகளிடம் செல்போன் தருவது பேராபத்தில் கொண்டுபோய் விடும் என்பதற்கு உதாரணமாய் பல சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். அவற்றில் விபரீத உதாரணம் இங்கே நாம் பார்க்கப்போவது:

தன்னிடமிருந்து செல்போனை பறித்ததற்காக பெற்ற தாயை கொல்ல முயன்ற 13 வயது சிறுமி, தற்போது மருத்துவ பராமரிப்பில் இருக்கிறார். ஒரே செல்ல மகள் தன்னை கொல்ல முயன்றது குறித்தான அதிர்ச்சி வெளிப்பட்டதில், தாயார் இடிந்து போயிருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் அந்த தாய், கடந்த சில தினங்களாக வீட்டில் தன்னைச் சுற்றி மர்மமாய் ஏதோ நடப்பதாக அறிந்தார். கணவர் வெளியூரில் பணியாற்ற, 13 வயது மகளுடன் தனித்திருந்த தாய்க்கு, ஒரு கட்டத்தில் கிலி ஏற்பட்டது. அவரைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள் அப்படி.

ஒரு முறை பாத்ரூம் சென்று திரும்பி வரும்போது, தரையில் சிந்தியிருந்த எண்ணெயில் கால் வைத்ததில் தடுமாறி விழுந்தார். தலையில் அடிபட்டிருந்தால் அந்த கணமே மரணம் நிகழ்ந்திருக்கக் கூடும். அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைத்திருக்கிறார். இன்னொரு முறை சர்க்கரை டப்பாவில் பூச்சிமருந்து பவுடர் கலந்திருந்ததை கடைசி நேரத்தில் கண்டறிந்ததில் அரண்டு போனார். இப்படியான திகில் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்தவர், ஒரு நாள் ஆற அமர்ந்து அவற்றின் பின்னணி குறித்து யோசிக்கலானார்.

தாய் மகள் என இரண்டே பேர் தான் வசிக்கும் வீட்டில் தனக்கு எதிராக குறிவைக்கப்பட்ட மர்ம சம்பவங்களின் பின்னே யார் இருக்கக்கூடும் என யோசித்தவருக்கு தூக்கிவாரிப்போட்டது.

அவரது மகளுக்கு 13 வயதாகிறது. மணமாகி 14 வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற மகள். கேட்டதையெல்லாம் வாங்கித்தந்து பாராட்டி சீராட்டி வளர்த்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்ற தாய்க்கு எதிராக ஒரே மகள் ஏதாவது செய்திருக்க வாய்ப்புண்டா என அந்த தாய் தடுமாறினார். வேறு வழியில்லை என மனதை கல்லாக்கிக்கொண்டு மகளை உளவு பார்க்க ஆரம்பித்தார்.

அப்போதுதான், மகளின் இன்னொரு முகம் தெரிய வந்தது. நேரில் இயல்பாகவும், பெயருக்கு பேசியும் வந்த மகள், உள்ளுக்குள் பெற்ற தாய் மீது கடும் சீற்றத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அரசின் அவசர உதவி எண்ணை அழைத்து விவரத்தை கூறினார். மருத்துவ உளவியல் நிபுணர்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர். குடும்ப நண்பர்கள் போல சற்று நேரம் சிறுமியுடன் பேச்சு கொடுத்தனர். அந்த சிறுமியைப் பற்றி அவர்கள் எடைபோட, அது அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

அதன் பிறகு பெற்ற மகள் குறித்து தாய் அறிந்திராத பலவற்றையும் அவர்கள் கண்டு சொன்னார்கள். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுமிக்கு விலை உயர்ந்த மொபைல் போனை பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். வகுப்பு நேரம் போகவும் அதில் சதா மூழ்கியிருந்த சிறுமி, ஒரு கட்டத்தில் செல்போனுக்கு அடிமையாகிப் போனார். அதனை கண்டிக்கும் முகமாய், அண்மையில் மகளிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டார் தாய்.

செல்போனுக்கு அடிமையான சிறுமியால் அதனை தாங்க முடியவில்லை. எனவே தனக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் பலவாறாகத் திட்டமிட்டு பெற்ற தாயை கொல்ல முயன்றிருக்கிறார். இந்த உண்மை தெரிய வந்ததும் தாய் அடைந்த அதிர்ச்சிக்கு அளவில்லை. மகள் இப்போது போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ச்சியிலிருந்து மீளாத தாய்க்கும் மருத்துவ உதவி அவசியமாகி வருகிறது.

தவமிருந்து பெற்ற மகள், தாயை கொலை செய்யும் அளவுக்கு சீரழித்திருக்கிறது செல்போன் என்னும் வஸ்து. பெற்றோர்களுக்கான படிப்பினை சேதி இது.

x