அண்ணனின் நகைக்கடையில் இருந்து 1 கிலோ தங்க நகை, 15 லட்சம் பணம் திருடிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சவுகார்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் ஜெயின்(33). இவர் தனது இளைய சகோதரர் வினோத் ஜெயினுடன் சேர்ந்து சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆர்.என் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 3-ம் தேதி யோகேஷ் வழக்கம்போல் கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது, கடையிலிருந்த 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த யோகேஷ், யானை கவுனி காவல் நிலையத்தில் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் யோகேஷ் ஜெயினின் சகோதரர் வினோத் ஜெயின் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வினோத் ஜெயினின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று கீழ்ப்பாக்கத்தில் பதுங்கி இருந்த வினோத் ஜெயினை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் பணத்தை போலீஸார் மீட்டனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வினோத் ஜெயின் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தங்க நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றதும், நகைக்கடையிலிருந்து 1 கிலோ நகைகள் மற்றும் 3 லட்சம் மட்டுமே திருடி சென்றதும் தெரியவந்தது. வினோத் ஜெயினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.