4 முறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை; குமரி கலெக்டர் ஆபீஸில் தற்கொலை செய்ய வந்த மூதாட்டி: பதறிய போலீஸ்


தன் சொத்துக்களை வாங்கிக் கொண்டு, பிள்ளைகள் தன்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூதாட்டி தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்க வந்தனர். இதற்காகவே திங்கள் கிழமைகளில் ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இங்கு இன்று மேல ஆலன்விளையைச் சேர்ந்த ரோஸ்லின் என்ற மூதாட்டி மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் கையில் ஒரு பாட்டில் இருந்தது. ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பில் நின்ற பெண் காவலர் அந்த மூதாட்டியின் கையில் இருந்த பாட்டிலை பறித்து சோதனை செய்தார். அதில் மண்ணெண்ணெய் இருந்தது. இதனைத் தொடர்ந்து அதை பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது ரோஸ்லின், “தனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் என் சொத்தை எழுதிவாங்கிக் கொண்டு என்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நான் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கிறேன். ஏற்கெனவே நான்குமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் இங்கு தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார், அந்த மூதாட்டிக்கு அறிவுரை சொல்லி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

x