நெல்லையில் இறைச்சிக்காக கழுகுவேட்டை: 3 பேர் கைது; 4 கழுகுகள் உயிருடன் மீட்பு


கழுகு

திருநெல்வேலியில் கழுகுகளை கண்ணிவைத்துப் பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய இருந்த மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து உயிருடன் 4 கழுகுகள் மீட்கப்பட்டன.

திருநெல்வேலி டவுன் பகுதியில் இறைச்சிக் கழிவுகளைப் போட்டு கண்ணிவைத்து சிலர் அரியவகை கழுகுகளைப் பிடிப்பதும், அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வது குறித்தும் நெல்லை மாவட்ட வனத்துறையினருக்கு புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் டவுன், பேட்டைப் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். அதில் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பாலமுருகன், வேலாயுதம் ஆகியோர் கழுகுகளை கண்ணி வைத்துப் பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இவர்கள் அடிக்கடி இப்படிக் கழுகுகளைப் பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்தும் வந்துள்ளனர். இவர்கள் வீடுகளுக்கே தேடிவந்து வாடிக்கையாளர்கள் சிலர் கழுகு இறைச்சியை வாங்கிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து கழுகுகளைப் பிடிக்க பயன்படுத்திய வலைகள், இறைச்சிக் கழிவுகள், கழுகுகளை அடைத்து வைத்து இருந்த கூண்டு, நான்கு கழுகுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இறைச்சிக்காக கழுகுகளை வேட்டையாடிய மணிகண்டன், பாலமுருகன், வேலாயுதம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

x