இரட்டைக்கொலை செய்த வாலிபர் தலைமறைவு: போதையில் உளறியதால் 30 ஆண்டுகளுக்குப் பின் கைது


அவினாஷ் என்ற அமித் பவார்.

கொள்ளையிடச் சென்ற இடத்தில் இரட்டைக் கொலை செய்து விட்டு தலைமறைவானவர் குடிபோதையில் உளறியதால் 30 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள லோனாவாலாவில் 1993 அக்டோபர் மாதம் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டில் கொள்ளையிடச் சென்றது. அப்போது கொள்ளையைத் தடுக்க முயன்ற அந்த வீட்டின் உரிமையாளர்(55), அவரது மனைவி(50 ) ஆகியோரை அந்த கும்பல் கொலை செய்தது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவினாஷ்(19) என்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மும்பையில் இருந்து டெல்லிக்கு தப்பிச் சென்ற அவினாஷ், தனது பெயரை அமித் பவார் என்று மாற்றி ஓட்டுநர் உரிமம் பெற்றார். அதே பெயரில் ஆதார் அட்டையைப் பெற்றதுடன் திருமணம் செய்து கொண்டார். இதன் அஹ்மத்நகர் உள்பட பல பகுதிகளுக்கு இடம் மாறினார். இறுதியாக மும்பையில் உள்ள விக்ரோலிக்கு வந்து குடும்பத்துடன் குடியேறினார்.

அவர் இரட்டைக்கொலை செய்து 30 ஆண்டுகளாகி விட்டது. தற்போது அமித் பவாருக்கு 49 வயதாகிறது. இந்நிலையில்,பாரில் மது அருந்தும் போது, தான் இரட்டைக்கொலை செய்ததை போதையில் அமித் உளறியுள்ளார். இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டரும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டான தயா நாயக்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமித் பவார் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," 1993-ம் ஆண்டு லோனாவாலாவில் கடை நடத்தி வந்த அவினாஷ்,கொலைக்குப் பின் அந்த ஊருக்குச் செல்லவில்லை. பெற்றோரையும் பார்க்கவில்லை" என்றனர்.

இரட்டைக்கொலை செய்து 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் போதையில் உளறியதால் சிக்கிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x