தமிழ்நாட்டில் திருச்சியில் அடுத்த 'சம்பவம்': டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பலி!


மது குடித்து பலியானவர்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் டாஸ்மாக் மது குடித்த தொழிலாளிகள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (48) மற்றும் முனியாண்டி(55) ஆகிய இருவரும் நேற்று முன் தினம் மதியம் தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வீடு திரும்பிய இருவருக்கும் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தச்சங்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் மது அருந்திய 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ள நிலையில் தற்போது திருச்சியில் இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x