சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன பெண் இயக்குநரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி வசூலித்து மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி என்பவர் தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்எம்ஏக பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கலைச்செல்வி தனக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. கலைச் செல்விக்கு ஜாமீன் வழங்க காவல் துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கலைச்செல்வி்யின் ஜாமீன் மனுவை நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.