துப்பாக்கி ஏந்திய டூவீலர் போலீஸ் ரோந்து: ஐஜி உத்தரவில் மதுரை எஸ்பி நடவடிக்கை


மதுரை: தென்மண்டல ஐஜி உத்தரவின்பேரில், மதுரை மாவட்டத்தில் அதிக குற்றச்செயல்கள் நடக்கும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய டூவீலர் போலீஸ் ரோந்து செல்ல காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என, தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இம்மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறிந்து, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய டூவீலர் போலீஸ் ரோந்து செல்ல காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி, அலங்காநல்லூர், நாகமலை புதுக்கோட்டை உட்பட முக்கிய காவல் நிலைய எல்லைகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் டூவீலர் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்து பணியின்போது, சமூக விரோத செயல்கள், சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்பி கூறுகையில், “டூவீலர் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார் தங்களுடன் எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x