பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி ஒருவர், தனது வீட்டில் திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் கோபிகா என்ற மகளும் இருந்தனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு கோபிகா படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கூடம் சென்ற கோபிகா, பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியுள்ளார். இதன் பின் உணவு சாப்பிட்ட பின் தனது அறைக்கு சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது தாய், அறைக்கதவைத் திறக்க முயன்ற போது அது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கோபிகா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீஸார், மாணவி கோபிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.